பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருக்கும் நிலையில் அதற்கான விருப்ப மனுவைப் பெறும் நாள் இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டதுபோல் கமலின் கட்சியில் இல்லாதவர்களும் விருப்ப மனு அளிக்க அழைப்பு விடப்படலாம் என்று தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1300-க்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், புதுச்சேரி, பெரும்புதூர், திருவள்ளூர், அரக்கோணம், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 12 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

20 தொகுதிகளுக்குசென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் 2-வது நாளான நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், பொது செயலாளர் அருணாச்சலம், நடிகை கோவை சரளா உள்ளிட்ட குழுவினர் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், சிவகங்கை, தேனி, தஞ்சாவூர் , தென்காசி, திருப்பூர் ஆகிய 20 தொகுதிகளுக்கு நேர்காணலை நடத்தினர். நேர்காணலில் பங்கேற்ற அனைவருக்கும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கமல்ஹாசன் வழங்கினார்.

இதுஒருபுறம் இருக்க, 18 சட்டப்பேரவை இடைதேர்தலில் போட்டியிடவும் மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான நேர்காணல் வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் நேர்காணலை விரைந்து முடித்து ஒரிரு நாளில் இடைதேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட் டுள்ளார். 

ஏற்கனவே பாராளுமன்றத்தேர்தலுக்கு எந்தக் கட்சியிலும் இல்லாத நடைமுறையாக தனது கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்த கமல் அதே நடைமுறையை சட்டப்பேரவை இடைத்தேர்தல் விவகாரத்திலும் செயல்படுத்துவார் என்று தெரிகிறது.