வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதிவரை நடைபெற உள்ள கமலின் பிரம்மாண்ட பிறந்தநாள் விழாவில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது. இவ்விழாவில் கமலின் ஆருயிர் நண்பர் ரஜினி உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

கமல்ஹாசன் நவம்பர் 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை தனது கட்சி நிர்வாகிகளின் வற்புறுத்தலால் பெரும் விழா நடத்த அனுமதித்துள்ளார். 7, 8, 9 என மூன்று நாட்கள் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இவ்விழாவில் ஒட்டுமொத்த தமிழ்சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் எப்போதுமே தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார். அதற்கு காரணம் அவரின் தந்தை. கமல் தன் தந்தை ஸ்ரீநிவாசதேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார். தன் தந்தையே தனது கலையுலகுக்கு முன்மாதிரியாக இருந்தார் என்று கூறியிருக்கிறார்.அவரது நினைவு நாள் தனது பிறந்தநாள் அன்று வருவதால் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து விடுவார்.

 இதுகுறித்துப் பேசிய அவரது கட்சி நிர்வாகிகள்,’இந்த ஆண்டு கமலின் சினிமா வாழ்க்கையில் 60-ம் ஆண்டு. எனவே அதையும் சேர்த்து கொண்டாட நிர்வாகிகளான நாங்கள் விருப்பப்பட்டோம். அப்போது கமல் சொன்ன யோசனை தான் தந்தைக்கு சிலையும் இளைஞர்களுக்கு பயிற்சி மையமும். பிறந்தநாள் அன்று 7ந்தேதி காலை தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்றைய தினமே பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதுபோன்ற மையங்கள் தமிழ்நாடு முழுக்க அமைக்கப்படலாம்.இதன்மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் திறன் சார்ந்தும் உடல் சார்ந்தும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த நாளான 8-ந்தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹேராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. இதில் கமல் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஹேராம் படக்குழுவினரும் கலந்துகொள்வார்கள்.

அடுத்த நாள் 9-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ’உங்கள் நான்’ என்ற பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது’என்கின்றனர்.

ஆனால் திரையுலக வட்டாரத்திலோ கமலின் இந்த 60 ஆண்டுகால கலைச்சேவையைப் பாராட்டி தயாரிப்பாளர் சங்கம்தான் விழா நடத்தியிருக்கவேண்டும் என்று ஆதங்கப்படுகின்றனர்.