‘இந்தியன்-2’நிச்சயமாக ஒரு அரசியல் படம்தான். அப்படம் எனக்குப் புதிய அனுபவம். என்னால் முடிந்த பங்களிப்பைச் சிறப்பாக அளித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும். எனது அரசியலுக்கும் அந்தப் படம் பயன்படும் என்று நம்புகிறேன்’என்கிறார் கமல்.

கமல் 60 கலை நிகழ்வு ஏறத்தாழ ஒரு அரசியல் மேடையாகவே ஆகிவிட்ட நிலையில், நேரு உள்விளையாட்டரங்கை அந்நிகழ்ச்சிக்காக கொடுத்ததற்கு தமிழக அர்சுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் கமல். அவ்விழாவில் கமலின் முழுமையான பேச்சு இதோ...60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உத்வேகத்துடன் புறப்பட்டேனோ?, அதே உத்வேகத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன். தமிழ் மக்களும் ரசிகர்களும் தான் இத்தனை காலம் என்னைக் கடத்தி வந்திருக்கிறீர்கள்.எதற்கு இந்த வீண் வேலை? சினிமாவில் இருந்து கொண்டே இதைச் செய்யலாமே? என்று கேட்கிறார்கள். சினிமா என் தொழில். அரசியல் எனது சேவைக்கான களம். நான் சினிமாவை கண்டுவிட்டேன். அரசியலிலும் அதைச் செய்யலாமே, அது எப்படி இருக்கும்? என்று பார்த்து விடலாமே என்ற பேராசை எனக்கு உண்டு.

அரசியல் எனக்குத் தெரியாது என்கிறார்கள், உண்மை தான். இப்போதுள்ள அரசியல் எனக்குத் தெரியாது தான்.ஆனால் மக்கள் விரும்பும் அரசியல் தெரியும். அந்த அரசியலை நோக்கித் தான் செல்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு நான் தகுதியானவனா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இன்னும் வேலை நிறைய இருக்கிறது.தமிழகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும், நல்லது செய்ய வேண்டும். அதை வார்த்தைகளால் சொல்வதை விட செயல்களால் செய்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு பக்கபலமாக என் எஞ்சிய திரைப்படங்கள் இருக்கும்.அந்த திரைப்படங்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. அந்த திரைப்படங்கள் முடிந்த பிறகு நான் மக்கள் பணியில் அதாவது உங்களுடன் வந்து கலந்து கொள்வேன்.

எனக்கு நீங்கள் கொடுக்கும் புகழ்ச்சி என் கடமையை இன்னும் அதிகப் படுத்தி இருக்கிறது. என்னை யார் உண்மையாகப் பாராட்டுகிறார்கள்? எனக்காக யார் உண்மையாகப் பேசுகிறார்கள்? என்பதை எளிதில் என்னால் கண்டுபிடித்து விட முடியும் ஏனென்றால் நான் ஒரு நடிகன்.அடுத்து திரையுலகில் இளைய தலைமுறையினரை ஊக்குவித்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் கலங்கரை விளக்கமாக எனது ராஜ்கமல் கம்பெனி திகழும். அதை எட்ட இருந்து பார்த்து ஆனந்தப்படும் ஒருவனாய் நான் இருப்பேன். ஏனென்றால் எனக்கு வேறு வேலைகள் உள்ளன.

சினிமாவில் ஓரளவு செய்திருக்கிறேன், செய்ய வேண்டும். வேலை முடிந்தாலும் சினிமா மீதான என் காதல் தொடரும். சினிமா மீதான அன்புக்கு நான் நடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. இனி மாதம் 15 திரைப்படங்களைக் கண்டு களித்து மகிழும் ரசிகனாக சினிமாவை சுற்றி வருவேன். நான் உலக சினிமாவின் ரசிகன், உண்மையான காதலன். எனக்கு அது தான் பொருந்தும் இறுதி வரைக்கும்.சினிமாவுக்கு என்னைப் போன்றோர் பலர் சேவை செய்கிறார்கள். எனக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். அந்தப் பணியை மணிரத்னம் போன்ற முன்னோடிகள் செய்து காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

‘இந்தியன்-2’ நிச்சயமாக ஒரு அரசியல் படம்தான். அப்படம் எனக்குப் புதிய அனுபவம். என்னால் முடிந்த பங்களிப்பைச் சிறப்பாக அளித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும். எனது அரசியலுக்கும் அந்தப் படம் பயன்படும் என்று நம்புகிறேன். எனக்கு விருந்தோம்பல் தெரியாமல் போகலாம், ஆனால் வருவோரின் அன்பைத் தாராளமாக பெற்றுக்கொள்ள தெரியும்.

கண் கலங்காமல் பேசுவதும் ஒரு சாதுர்யம் தான். அதை ஓரளவு செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். திரைக்கு முன்பாகவும், பின்பாகவும் ஏராளமான கலைஞர்கள் எனக்கு விழா எடுத்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனுக்கு விழா எடுத்து ஆனந்தப்படுவது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.இதுபோன்ற விழாக்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தை அரசு தருவதில்லை. ஆனாலும் தமிழக அரசு இந்த நிகழ்ச்சிக்கு இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி, நன்றியும் கூட.நல்ல அரசியலுக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்’என்கிறார் கமல்.