கமலஹாசனின் அரசியல் பயணத்திற்கு நல்ல ஒரு ஆரம்பமாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். முதல் முறையாக கமல் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சி என்பதனாலேயே இந்த நிகழ்ச்சியை அதிக ஆர்வத்துடன் கவனித்தனர் மக்கள். அதன் பிறகு தான் போட்டியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினார்கள்.

கமல் அரசியலுக்கு வர இருப்பதை மக்கள் மத்தியில் உரக்க சொன்னதே இந்த மேடையில் வைத்து தான்.  மக்களிடம் நெருங்கி உரையாடிட இவ்வளவு அருமையான ஒரு தளம் எந்த ஒரு அரசியல்வாதிக்குமே கிடைத்திருக்காது என கமலே ஒருமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தெரிவித்திருக்கிறார். இப்படி கமலின் அரசியல் வாழ்க்கையில் நல்ல ஒரு துவக்கமாக இருந்த இந்த நிகழ்ச்சியே தற்போது கமலுக்கு எதிராக மாறி இருக்கிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்த யதார்த்தம் கூட இரண்டாவது சீசனில் இல்லை. இதனால் இது முழுவதுமாக சித்தரிக்கப்பட்டு நடக்கும் ஸ்கிரிப்டட் ஷோ என்பது இம்முறை அப்பட்டமாக தெரியவந்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது மக்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார். அதே போல முதல் சீசனின் போது கமல் நிகழ்த்தும் உரைகளாகட்டும், போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிகாட்டும் விதமாகட்டும் அதில் ஓரளவு நடுநிலை இருக்கும். 

ஓவியா விஷயத்தில் கூட மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் திருப்திகரமாக தான் பதிலளித்திருந்தார் கமலஹாசன். காயத்திரி , ஜூலி விஷயங்களில் காட்டிய பாகுபாட்டை இதில் சேர்க்க முடியாது தான்.  ஆனால் பிக் பாஸின் இரண்டாவது சீசனில் அப்படி இல்லை. இந்த இரண்டாவது சீசனில் ஆரம்பம் முதல் இப்போது வரை நடைபெற்றுவரும் எந்த எலிமினேஷனுமே நியாயமாக இல்லை. நித்யா, பொன்னம்பலம், சென்றாயன் போன்றோரை மக்களுக்கு பிடித்திருக்க தான் செய்தது. மொத்தத்தில் மக்கள் எதிர்பார்ப்பின் படி இந்த சீசனில் நடந்த எலிமினேஷன் மகத்தின் எலிமினேஷன்  மட்டும் தான்.

 சென்றாயன் விஷயத்தில் கடும் கோபத்தில் இருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.  இந்த சீசனில் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்த ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேற வேண்டும் என்று தான் அதிகம் விரும்பினார்கள். ஆனால் நடந்ததோ முற்றிலும் மாறுபட்ட நிகழ்வு. அதிலும் ஐஸ்வர்யா தான் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார் என ஒரு புள்ளிவிவரம் வேறு இதில் காட்டப்பட்டது உச்சகட்ட ஏமாற்று வேலை என்றே மக்கள் கருதுகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஓட்டிங் மீது ,மக்களுக்கு இப்போதெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. ஒரு சாதாரண நிகழ்ச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள் குறித்து அறிந்தும் , கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார் கமல். பிக் பாஸ் ஒரு சாதாரண நிகழ்ச்சி தான் . இதிலேயே கள்ள ஓட்டு, ஏமாற்று வேலை என எக்கச்சக்க அரசியல் இருக்கிறது. இதை கண்டும் காணமல் இருக்கும் கமல் , அரசியலில் மட்டும் எப்படி உண்மையை உறக்க சொல்வார்? என ஒரு மிகப்பெரிய அளவிலான கேள்வி தற்போது மக்கள் தரப்பில் எழுந்திருக்கிறது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமலுக்கு கிடைத்த ரசிகர்கள் , அதே நிகழ்ச்சியின் மூலம் அவரிடம் இருந்து விலகும் சூழல் தற்போது நிலவுகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறாரோ நம் உலகநாயகன். மொத்தத்தில் கமலின் அரசியல் பயணத்திற்கு பிக் பாஸின் முதல் சீசன் பைடிக்கல்லாகவும் , இரண்டாவது சீசன் தடைக்கல்லாகவும் அமைந்திருக்கிறது.