சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் எந்தப் பங்களிப்பும் இல்லாத ஒரு படத்தை அவரது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. விக்ரம்,கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாஸன் நடிக்கும் இப்படத்துக்கு ‘கடாரம் கொண்டான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் மிகக்கொடூரமாகக் காட்சி அளிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது 64 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கமல் வெளியிட்டார்.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் 1986ம் ஆண்டு துவங்கப்பட்டு அந்நிறுவனத்தின் முதல் படமாக ‘விக்ரம்’ தயாரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே சந்தானபாரதி இயக்கத்தில் மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ‘ஆவநாழி’ படத்தை சத்யராஜை நாயகனாக்கி ராஜ்கமல் தயாரித்தது. இப்படத்தில் கமல் வெறுமனே தயாரிப்பாளராக மட்டுமே இருந்தார். 

தற்போது 31 ஆண்டுகளுக்குப் பின்னர் கதை, திரைக்கதை, வசனம்,  நடிப்பு, விக்ரமுக்கு மேக் அப் போடுவது  என்று கமலின் எந்தப்பங்களிப்பும் இன்றி ராஜ்கமல் தயாரிக்கும் படம் ‘கடாராம் கொண்டான். இப்படத்தை கமலின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ‘இந்தியன் 2’ அறிவிப்பை ராட்சத பலூனை பறக்கவிட்டு லைகா நிருவனம் அறிவித்துள்ள நிலையில் ‘கடாரம் கொண்டான்’ டீமும் ட்விட்டரில் ட்விட்டர் மூலமும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவரும் அன்பர்கள் பொக்கே, சால்வை போன்ற சம்பிரதாயங்கள் ஏதுமின்றி வெறுங்கையோடு வந்து வாழ்த்திவிட்டு ‘உடல் தானம் செய்யுங்கள். தாயாய் மாறுங்கள்’ என்று தொடர்ச்சியாய் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார் கமல்.