கமலின் மூன்று நாள் பிறந்தநாள் நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுக்க களைகட்டத் துவங்கியுள்ள நிலையில் இன்று காலை தனது அண்ணன் சாருஹாசன், மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா,நடிகை சுஹாசினி மற்றும் குடும்பத்தினருடன் தனது தந்தையின் உருவச் சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார். அவருக்கு நடிகர் பிரபு உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

நேற்று மாலை முதலே முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் இந்தியா முழுவதுமிலிருந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்கள் ஃப்ரொபைல் படங்களை கமலுடன் இருக்கும் படங்களை வைத்து மாற்றிவருகின்றனர். மிக ஆச்சர்யாமாக இம்முறை ரஜினி ரசிகர்கள் கமலை, அவரது சாதனைகளை வியந்து வாழ்த்துவதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் ஐந்து இடங்களிலும் கமல் பிறந்தநாள் வாழ்த்துகளே முன்னிலையில் உள்ளன. அதே போல் அஜீத், விஜய் ரசிகர்களும் கமலை மனப்பூர்வமாக வாழ்த்தி வருகின்றனர்.

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சில தினங்கள் முன்பே தனது இல்லத்துக்கு வரவழைத்து தடபுடல் விருந்து வைத்துக்கொண்டாடிய பிரபு இன்று காலை பரமக்குடிக்கு நேரில் சென்று கமலுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தது பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘என் தந்தை சிவாஜியின் கலையுலக வாரிசு என்றால் அது கமல் ஒருவர்தான். அவர் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர்களுல் ஒருவர்’என்று எப்போதுமே பிரபு கமல் பற்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.