மீண்டும் மீண்டும் சப்பையான காரணங்களைக் கூறிக்கொண்டு கமல் இடைத்தேர்தல்களை புறக்கணிப்பதன் மூலம் டிடிவி தினகரன் போலவே அரசியலில் இருந்து காணாமல் போகப்போகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினரே புலம்பி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 தொகுதிகளிலும், அதனுடன் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ‘டார்ச் லைட்’ சின்னத்துடன் களமிறங்கிய அக்கட்சி, சுமார் 3.72 வாக்குகளை  பெற்றது.இதனையடுத்து வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கையில், அக்கட்சி வேலூர் இடைத்தேர்தலை சந்திக்காது என கமல் அறிவித்தார். இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இத்தேர்தலை கமல் தனது சுயநலத்துக்காக தவிர்க்கிறார் என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

இடைத்தேர்தல்களில் போட்டியிடாதது குறித்து கமல்  நேற்று வெளியிட்ட அறிக்கையில், ’தலைப்பாகைகளை தக்கவைத்து கொள்ளும் எண்ணத்துடன் நடக்கும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என தனது வழக்கமான குழப்ப நடையில் தெரிவித்திருந்தார். ஊழல் நாடகத்தை எதிர்ப்பதற்குத் தானே அரசியலுக்கு வந்திருக்கிறோம். அப்புறம் இந்த பின்வாங்கல் ஏன்? என அவரது கட்சியினர் கமலை வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர்.

இன்னொரு பக்கம், இனிமேல் மக்கள் பணிதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணத்துக்காக கூத்தடிப்பது, வாங்கிய பணத்தைத் திரும்பத்தர மனமில்லாமல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த படங்களைத் துவங்குவது ஆகியவற்றில் மட்டுமே கமல் குறியாக இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் தமிழக அரசியலின் அடுத்த டி.டி.வி. தினகரன் கமல்தான் என்றும் அவரது கட்சியினரே விமர்சிக்கின்றனர்.