ராமநாதபுரம் அல்லது தென் சென்னையில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் கமல் சுத்தமாக ஒதுங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தனது கட்சியின் பலம் தெரிந்துகொள்ள ஒரு விஞ்ஞானி எலிகளை வைத்துப் பரிசோதனை செய்வது போல் தனது வேட்பாளர்களை நிறுத்தி ஆழம் பார்க்கிறார் என்று பலரும் கமலைக் கிண்டலடித்துள்ளனர்.

இதுகுறித்த செய்திகளுக்கு கோவை கூட்டம் முடிந்து இன்று காலை சென்னை திரும்பிய கமல் விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,"வேட்பாளராக நிற்பதற்கு தயக்கமில்லை, எனக்கு வேலை இருக்கிறது. இந்த பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன். அதுதான் என் வேலை. இன்று இந்த முகங்கள் தெரியாமல் இருக்கலாம். நாளை இந்த முகங்களை மக்களுக்கு தெரியவைப்பது என்னுடைய கடமை. என்னை ஒரு உபேர் டாக்ஸி போன்று கருதுகிறேன். அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும்.

இதன்மூலம் இன்னும் அதிக மக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால், தொகுதி நலன் கருதி, சுயநலன் கருதி அந்த இடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் நான் இருமுறையாவது செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த விமர்சனம் பின்னர் பாராட்டாக மாறும்.

50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி சாத்தியமா என்று கேட்கிறார்கள். சாத்தியமாவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். சாத்தியமில்லாத பெருங்கனவுகளை காட்டி மக்களை மயக்க விரும்பவில்லை. எது சாத்தியமோ அதைமட்டுமே எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதனை சொல்வதற்கு முன்னர், இது முடியுமா, முடியாதா என்பதை பல வல்லுநர்களுடன் ஆராய்ந்து தான் முடிவெடுத்திருக்கிறோம்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.