’இந்தத் தேர்தலில் எங்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பத்து சதவிகிதம் வரை வாக்குகள் வாங்கினாலே போதும். என் அரசியல் பயணம் சிறப்பாகத் துவங்கியிருக்கிறது என்று அர்த்தம்’ என்கிறார் கமல்.

40 மக்களவை மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல்களுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ள கமல் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது கட்சி 5 முதல் 10 சதவிகிதம் வாக்குகளையே பெறும் என்று நிதானத்துக்கு வந்திருக்கிறார். அப்பேட்டியின் விபரம் இதோ...

கேள்வி:- தேர்தல் பிரசாரக் களம் கடினமாக இருந்ததா? படப்பிடிப்புகளோடு இதை ஒப்பிடுவீர்களா?

பதில்:- கடினமாக இல்லை. சினிமாவில் பணிபுரிவது என்பது வேறு. வெயில், பயணம், கதாநாயகிகளுடன் நடனம், வில்லன்களுடன் சண்டை என்று இருக்கும். அரசியலில் அப்படி இல்லை. வில்லன்களுடன் அமைதியாக மோதவேண்டி இருக்கிறது. ஆனால் நடிகனாக எனக்கு மக்களிடம் கிடைத்த அன்பைவிட இப்போது அதிக அன்பு கிடைக்கிறது.

கே:- இந்த தேர்தலை உங்களுக்கான ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாமா?

ப:- இல்லை. எனக்கான ஆசிட் டெஸ்ட் என்பது நான் டுவிட்டரில் இருந்து நேரடி கள அரசியலுக்கு வந்தபோதே முடிந்துவிட்டது. நான் மனதளவில் ஏற்படுத்திக்கொண்ட ஆசிட் டெஸ்ட் அது.

கே:- உங்கள் கணிப்புபடி உங்கள் கட்சியின் கள நிலவரம் என்ன?

ப:- நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட சிறப்பாகவே இருக்கிறது. 5 சதவீதத்துக்கு மேல் நாங்கள் வாக்குகள் பெற்றாலே பெரிது என்றார்கள். ஆனால் நான் அப்படி திருப்திபட்டுக் கொள்ளவில்லை. பதிலாக எங்களை நாங்களே தீவிரப்படுத்திக் கொண்டோம். பணம் கொடுக்காமல் முழுக்க முழுக்க பிரசாரத்தை மட்டுமே நம்பினோம். நிச்சயம் 10 சதவீத வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கே:- 10 சதவீதம் என்பது முழு வெற்றி ஆகாது. ஆனால் குறிப்பிடத்தக்க சதவீதம் தான். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தயாராகிறதா?

ப:- சூழ்நிலை வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தருகிறேன். இவர்கள் இருவருடனும் நான் கூட்டணி சேர மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தவறான கூட்டணியில் சேர்ந்து விடுகிறார்கள்.
அவர்கள் என்னுடன் இருந்து இருக்க வேண்டும். அந்த கூட்டணியை மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். தி.மு.க., அ.தி.மு.க, ஒன்றும் தீண்டத்தகாத கட்சிகள் இல்லை. ஆனால் அவை விமர்சனங்களுக்குட்பட்டவை. எனவே அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

கே:- சக அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்டு டிவியை உடைக்கும் வீடியோவை வெளியிட்டீர்கள். அவர்கள் மீதான கசப்புணர்வுதான் காரணமா?

ப:- நான் மீண்டும் கூட டிவியை உடைப்பேன். ஆனால் அது தனிப்பட்ட நபரை குறித்து அல்ல. நான் அரசியலுக்குள் நுழையும்போது அவர்கள் மீதும் அரசியல் மீதும் கசப்புணர்வு இருந்தது. ஆனால் இப்போது மக்களை களத்தில் சந்தித்த பின்னர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசியலை பொறுத்தவரை நான் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பேன். எனவே என்னிடம் தனி நபர் தாக்குதல் இருக்காது.

கே:- ஆக்ரோ‌ஷம் என்பதுதான் உங்கள் அரசியல் பாணியா?

ப:- நான் காந்தியை பின் தொடர்பவன். அவர் செய்த ஆக்ரோ‌ஷ அரசியல் தான் என்னுடையதும். ஆக்ரோ‌ஷம் என்பது என்னுடைய பேச்சில் தான் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் ஆக்ரோ‌ஷம் இருக்கும். இந்த கோபம், ஆக்ரோ‌ஷம் என்பதை நம்முடைய செய்தியை வலுவாக கொண்டு சேர்க்க மட்டுமே பயன்படுத்துவேன்.

கே:- கேரள முதல்வர் பினராயி விஜயனும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்களா?

ப:- நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே பினராயி என்னை நீண்ட பயணத்துக்கு தயாராகுமாறு கூறினார். கெஜ்ரிவால் என்னிடம் ‘நாங்கள் செய்து காட்டி விட்டோம். உங்களாலும் முடியும்’ என்று ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் தான் எனக்காக வாக்கு கேட்டார். எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

கே:- நீங்கள் எதிர்பார்த்த 10 சதவீதத்துக்கும் குறைவான அல்லது 5 சதவீத வாக்கு பெற்றால் என்ன செய்வீர்கள்?

ப:- நான் நீண்ட பயணத்துக்கு தயாராகி தான் வந்துள்ளேன். என் எஞ்சிய முழு வாழ்க்கையையும் அரசியலுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை தளம் தான்’ என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் கமல்

\