என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் 'மாமன்னன்'..! வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய, 'மாமன்னன்' படத்தின் பிரத்தேயக காட்சியை நடிகர் கமல்ஹாசன் பார்த்த நிலையில், ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படமாக நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இந்த திரைப்படம் ஜூன் 29-ஆம் தேதி, நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'மாமன்னன்' படத்தில், உதயநிதி இதுவரை நடித்துள்ள படங்களை விட, மாறுபட்ட கதைக்களத்திலும்.. கதாபாத்திரத்திலும்.. நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, அப்பாவாக வடிவேலுவும், வில்லனாக பகத் ஃபாசிலும் நடித்துள்ளனர். நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை, பட குழுவினர் உலக நாயகன் கமலஹாசனுக்கு பிரத்தியேகமாக போட்டுக் காட்டி உள்ளனர்.
மேலும் நடிகர்கள் கமலஹாசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ், "பெரும் பிரியத்தோடும், தீரா நம்பிக்கையோடும் என்னையும்.. என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக் கொண்ட கலைஞானி கமலஹாசன் சார் அவர்களுக்கு இதயத்தில் இருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் என தெரிவித்திருந்தார்".
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு, இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வு பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமலஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் பட குழுவினர் சார்பில், எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவுக்கு, நடிகர் கமலஹாசன் "மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்துக்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துக்கள் என ட்வீட் போட்டுள்ளார். கமலஹாசனின் இந்த பதிவு, தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.