'பொருளாதார ரீதியில் 'பாகுபலி' ஒரு சிறந்த படம். ஆனால், வார்டில் ஒட்டுமொத்த பிரமாண்டம் சிஜி வேலைகளால்தான்’ என்று உலகநாயகன்  கமல்ஹாசன் கூறியுள்ளார். 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ராமயா கிருஷ்ணன் நடித்த பாகுபலி இரண்டாம் பாகம் படம் உலக அளவில் ரூ. 1,290 கோடி வசூல் செய்து உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

பாகுபலியின் இந்த பிரமாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழுவினரையும் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்திய நிலையில் இதுவரை இப்படத்தை பற்றி வாய்திறக்காத நம்ம உலகநாயகன் கமல் ஹாசன் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

முன்னணி தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'பிக் பாஸ்' தமிழ் நிகழ்ச்சியை படப்பிடிப்புக்கு இடையில் பேசிய உலகநாயகன், பொருளாதார ரீதியாகப் பேசவேண்டுமென்றால் சினிமா  உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் 'பாகுபலி'. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர். படத்தின் பிரமாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன. 

ஆனால், எங்களால் ஹாலிவுட் படங்களை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, தரமான படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. 'பாகுபலி' படம், நாம் மிகச் சிறந்த கலாசாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. 

ஆனால், அவர்கள் இரண்டாயிரம் வருடக் கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது எழுபது வருடக் கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மௌரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ நம்மால் பின்பற்ற முடியாது. 

நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம். பாகுபலியின் இந்த பிரமாண்ட வெற்றியால் 'மருதநாயகம்' படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் அதிகரிக்கிறதா? என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.