இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகரமான உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-ஆவது பொதுக்குழு கூட்டம்நடைபெற்றது. இதில் ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் திமுக தலைவர் போட்டிக்கு யாரும் எதிர்மனு தாக்கல் செய்யாத நிலையில், 2-ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலினே ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்பாலும் போட்டியின்றி தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்து துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இதே போல துணை பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இதனையடுத்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், உழைப்பு உழைப்பு உழைப்பு என கருணாநிதியால் பாராட்டப்பட்டது தான் என் அடையாளம், என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்நிலையில் போட்டி இன்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஸ்டாலினுக்கு பிரபல அரசியல் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பத்தியில்... "இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும். என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.