சினிமா வரலாற்றில் முதல்முறையாக, கமல்ஹாசனுடன் இந்தி நடிகர் சல்மான் கான் ஜோடி சேர உள்ளார். நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை தற்போது வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படம், இந்தி மொழியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் இந்த படத்தை கமல்ஹாசன் எழுதி இயக்க, பூஜா குமார், ஆன்ட்ரியா ஜெராமியா, சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் வெளியானது. அதில், முஸ்லீம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவே, விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கமல்ஹாசன் கடுமையாகப் போராடி படத்தை ரிலீஸ்க்கு கொண்டுவந்தார்.அப்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான், விஸ்வரூபத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தனது ரசிகர்கள் கட்டாயம் அந்த படத்தை பார்த்து ஹிட் ஆக்க உதவும்படி கேட்டுக் கொண்டார். மேலும், கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு திரையிடலில் சல்மான் நேரடியாக பங்குபெற்றார்.தற்போது விஸ்வரூபம் 2 படத்திற்கான புரோமோஷன் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டப்பிங் செய்து, புரோமோஷன் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, சல்மான் கான் இந்தியில் ‘’தஸ் கா தம்’’ என்ற பெயரில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகத்திற்கு ஆதரவு தெரிவித்ததைப் போல, 2ம் பாகத்திற்கும் ஆதரவு தெரிவிக்க சல்மான் கான் முன்வந்துள்ளார். தஸ் கா தம் நிகழ்ச்சியில், விஸ்வரூபம் 2 படத்தை பற்றியும், மேலும் பல சுவாரசியமான விசயங்கள் பற்றியும் கமல்ஹாசன் பேசுவார் என்றும், அவ்வப்போது சல்மான் கான் கேள்வி கேட்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் இதுவரை ஒன்றாக சினிமா படங்கள், டிவி நிகழ்ச்சிகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. ஆனால், 2 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆம். அது, பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்தி மொழியில் சல்மான் கானும், தமிழ் மொழியில் கமல்ஹாசனும் தொகுத்து வழங்குகின்றனர். மேலும், கருத்தொற்றுமை கொண்டவர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.