செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல்... சந்திரயான் 3 வரை! கமல் மற்றும் ரஜினி போட்ட ட்வீட்!
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்துள்ள 'சந்திரயான் - 3' விண்கலத்தை பாராட்டி கமல் மற்றும் ரஜினிகாந்த் போட்டுள்ள ட்விட்டர் பதிவில், தங்களுடைய வாழ்த்துக்களை இஸ்ரோ குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் - 3 விண்கலம், கடந்த மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இஸ்ரோ குழுவினரால் விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்கள் விண்ணில் பயணித்த இந்த விண்கலம், நிலாவின் சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லாண்டர் இன்று மாலை 6.4 மணிக்கு மென்மையான முறையில், நிலாவில் தென் துருவத்தில் தரை இறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில், முதல் முறையாக கால் பதித்து சாதனையை படைத்தது இந்தியா.
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் இந்த நிகழ்விற்கு, தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவருமே நம் நாட்டின் சாதனையை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பதிவில் "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் சாதனையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இந்தியா மாபெரும் சாதனையால் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில், முதன்முறையாக, இந்தியாவின் சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இது தேசத்திற்கு பெருமைக்குரிய தருணம். எங்களை பெருமையடைய செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அரிய புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோவையும், சந்திரயான் - 3 விண்கலத்தையும் பாராட்டியுள்ளார்.
அதாவது 'செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல், நிலவில் இறங்கியுள்ளது வரை - என்ன ஒரு பயணம்! இஸ்ரோ குழு நம் நாட்டின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இன்று என தெரிவித்துள்ளார். அதே போல் இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை' என கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.