’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான்’ என்று மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது இல்லம் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் மநீம சார்பாக போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்துப்பேசிய கமல் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளபட்டி பகுதியில் இந்துக்களை மட்டம் தட்டிப்பேசினார். இதனால் கொதித்த பா.ஜ.க.வினர், அதிமுகவினர் இந்து மத ஆதரவாளர்கள் கமலுக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்துள்ளனர். கமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கட்சியில் தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜ.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.

அத்தோடு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய சில இந்து அமைப்பினர் கமலின் நீலாங்கரை இல்லம் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகத்தை இன்று முற்றுகை இடத்திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. அததகவல் பரபரப்பானதைத் தொடர்ந்து கமலின் இல்லம் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கமல் நாளை திருப்பரங்குன்றம் தொகுதியில்  பிரச்சாரம் மேற்கொள்வதாக இருக்கிறார். ஆனால் எதிர்ப்பு பலமாக உள்ளதால் கமலின் பிரச்சாரத்தை ரத்து செய்யும்படி அவரது கட்சியின் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்.இன்னொரு பக்கம் தனது பேச்சுக்கு கமல் மன்னிப்புக் கேட்டால் எதிருப்புகளின் வீரியம் குறையும் என்பதால் அந்த யோசனையையும் சிலர் கூறி வருவதால் மன்னிப்பு போல ஒரு விளக்கமும், விளக்கம் போல ஒரு மன்னிப்பும் அளித்துவிட்டு கமல் தனது பிரச்சாரத்தைத் தொடரக்கூடும் என்கிறார்கள்.