’நான் பி.ஜே.பி.க்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று பிரதமர் கூறிய கருத்துக்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. யாருடன் கூட்டுச் சேர்வது என்பதை அழைப்பு வருவதை ஒட்டி எல்லாம் முடிவு செய்யமுடியாது’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த கமல், ‘ரஜினியையும் என்னையும் பி.ஜே.பி. கட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்புவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதுகுறித்து நான் கருத்து சொல்லவேண்டிய அவசியமில்லை. 

‘இந்தியன் 2’ படத்தில் அரசியல் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். நானே முழுநேர அரசியல்வாதியாகிவிட்ட பிறகு சினிமாவிலும் ஏன் அரசியல் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம். அரசியல் எனது அவா. இந்த இரண்டையும் குழப்பிக்கொள்ளவேண்டியதில்லை’என்றார்.

பின்னர் பாராளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளிலும், திருவாரூர் இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் உறுதியாகப்போட்டியிடும் என்று தெரிவித்த கமல்,’ ஒரே ஒரு தொகுதிக்குத்தான் இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறார்களே என்று கவலைப்படுவதை விட அந்த ஒரு தொகுதிக்காவது அறிவித்திருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்’ என்றார்.