பொதுவாக தமிழ்சினிமாவில் சக்சஸ் மீட் என்பதே ‘உள்ள அழுகுறேன்...வெளிய சிரிக்கிறேன்’கதைதான் என்னும் நிலையில் படுதோல்வி அடைந்த ‘களவாணி 2’படத்துக்கு சக்சஸ் மீட்  வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர் இயக்குநர் சற்குணமும் நாயகன் விமலும்.

தட்டு தடுமாறி நீண்ட போராட்டங்களுக்கு பின் வெளியான படம் களவாணி - 2. இப்படத்தின் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கதாநாயாயகனாக விமல் நடித்த படங்கள் களவாணி மற்றும் வாகை சூட வா. இதில் வாகை சூட வா அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படமாகும்.இந்நிலையில் களவாணி - 2 மிகப் பெரும் வெற்றி பெற்றதாக நேற்று மாலை(ஜூலை 17) சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் இருவரும் அறிவித்ததைக் கண்டு படத்தை திரையிட்ட திரையரங்கு வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இப்படத்தின் நெகட்டிவ் உரிமை வாங்கிய ஸ்கீரீன் சென் நிறுவனம் படத்தயாரிப்பு, விநியோகம், வியாபாரம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை, நேர்மையை கடைப்பிடிக்கும் நிறுவனமாக தனது செயல்கள் மூலம் நிருபித்து வந்துள்ளது. இந்நிறுவனம் களவாணி - 2 படம் குறைந்த பட்ச லாபகரமான படம் என்று கூட அறிவிக்கவில்லை.படத்தின் தமிழ்நாடு உரிமை வாங்கிய கஸ்தூரி பிலிம்ஸ் பேசிய தொகையை முழுமையாக செலுத்த முடியாததால் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஏரியா உரிமைகளை ஸ்கீரீன் சென் நிறுவனமே திரும்ப பெற்று நேரடியாக ரிலீஸ் செய்தனர்.

தமிழகத்தில் களவாணி - 2  மிக மிக சுமாராகவே  ஓடியது திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் மட்டுமே. தமிழகமெங்கும் முதல் நாள் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 100 டிக்கட் விற்பனையாவதே போராட்டமாக இருந்தது என்கின்றனர் தியேட்டர் மேனேஜர்கள்.களவாணி - 2 தமிழ்நாடு உரிமை 4.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. திரையரங்குகள் மூலம் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த வருவாய் சுமார் 2கோடியைக் கூட எட்டாத நிலையில் தயாரிப்பு தரப்புக்கு ரூ 3கோடி வரை நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இத்தோடு நேற்று நடத்திய சக்சஸ் மீட் செல்வையும் சேர்த்தால் 3கோடியே 2லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேவையா இந்த சக்சஸ் மீட்?