ஜூன் மாத ரிலீஸ் படங்களின் பட்டியல் ஏற்கனவே எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில்,  கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பெரும்பஞ்சாயத்தில் சிக்கித்தவித்த ‘களவாணி 2’படத்தையும் இதே மாதம் ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முதல் களவாணி ரிலீஸ் ஆகி 9 வருடங்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் ‘களவாணி 2’படத்தின் முதல் பிரதி சுமார் 6 மாதங்களுக்கு முன்பே தயாரானது. ஆனால் இப்படத்தின் இயக்குநர் சற்குணம், கதநாயகன் விமல், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகிய மூவருக்கும் மத்தியில் இருந்த கொடுக்கல் வாங்கல் விவகாரமாக பல்வேறு முனைகளில் பஞ்சாயத்து நடந்து முடிந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் சமரச நிலைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து இம்மாதம் 28ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர்கள்  நேற்று இரவு அவசர அவசரமாக அறிவித்துள்ளனர்.

நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’, விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ தொடங்கி டாப்ஸியின் ‘கேம் ஓவர்’வரை இந்த ஒரே மாதத்தில் மட்டும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நிலையில் ‘களவாணி 2’வும் தற்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது