கடந்த வாரம் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி, இரட்டை அர்த்தத்தில் மோசமான வார்த்தைகளால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் ராதா ரவி இப்படி ஏன் பேசினார் என்றும், தனக்கு நயன்தாராவை பற்றி தெரிந்த உண்மைகளையும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்தாலே அந்த திரைப்படம் ஹிட் என ரசிகர்கள் நினைப்பதால், இவருடைய கால் ஷீட்க்காக பல முன்னணி நடிகர்கள் முதல் இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் காத்திருக்கின்றனர்.

முன்னணி இடத்தை பிடித்த நடிகை நயன்தாராவை பற்றி பொது மேடையில் ராதா ரவி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியது காட்டு தீ போல் பரவியது. இவரின் இந்த பேச்சுக்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். ராதா ரவியின் பேச்சுக்கு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். மேலும் பிரபல அரசியல் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்தும் ராதா ரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்...  நயன்தாரா - ராதா ரவி சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்... "ராதா ரவி மதிப்பிற்குரிய ஒரு மனிதர், சினிமா ஜாம்பவான் அவர் இப்படி பேசியது தவறு தான் அதை நானும் கண்டிக்கிறேன். இருப்பினும் நயன்தாராவை பற்றி இதுவரை எவ்வளவோ தவறான தகவல்கள் வந்துள்ளன. அப்படியிருந்தும் அவர் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சிறப்பான இடத்தில் இருந்து வருகிறார்.

பொதுவாகவே நயன்தாரா நல்ல மனதுடையவர். ஒரு முறை என்னுடைய ஸ்டுடென்ட் ஒருவருக்கு அவரச உதவி தேவைப்பட்டது. அப்போது நயன்தாரா சற்றும் யோசிக்காமல் பணத்தை கொடுத்து உதவினார்.

மேலும் இந்த சர்ச்சை குறித்து நான் ராதா ரவியிடம் பேசிய போது அவர் நான் விளையாட்டாக தான் பேசினேன். அது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும் என எதிர்ப்பார்க்கவில்லை என வருத்தத்துடன் கூறினார்" என தெரிவித்துள்ளார்.