மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் "கைதி". நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் என எக்கச்சக்க சிறப்பம்சங்களுடன் வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி தனித்து நிற்கும் "கைதி" படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கைதி படம் வசூலை ஈட்டி வருகிறது. குறிப்பாக, கார்த்தியின் டில்லி கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

படத்திற்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை, கைதி படக்குழுவினர் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினர். இதனிடையே, படத்தின் 2-ம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், "கைதி" படத்தை ஆதரித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. கைதி செட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரபு மற்றும் கார்த்திக்கு நன்றி... டில்லி மீண்டும் வருவார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம், கைதி 2 படம் உருவாகவுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இதற்கான கதை தயாராக உள்ளதாகவும், நடிகர் கார்த்திக் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு, நடிகர் கார்த்தியும் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.