'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் 'கைதி'. தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகளே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான 'கைதி' படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், தற்போது 350 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் சத்தமே இல்லாமல் பல சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை நடிகர் கார்த்தியின் எந்த படமும் செய்யாத சாதனையை கைதி படம் செய்துள்ளது. உலக அளவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த கார்த்தியின் திரைப்படம் என்ற பெருமையை கைதி பெற்றுள்ளது. வெறும் 25 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. 

இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படம் உணர்த்தியுள்ளது.