மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான படம் 'கைதி'. தீபாவளி விருந்தாக கடந்த 25ம் தேதி வெளியான இந்தப் படம், தமிழ் சினிமாவில் இப்படியொரு படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

படத்தில் ஹீரோயின் இல்லை... பாடல்கள் இல்லை... காமெடி இல்லை.. ஆனாலும் இரண்டரை மணிநேரம் பார்வையாளனை கட்டிப்போட்ட 'கைதி' படம், பாஸிட்டிவ் விமர்சனத்தால் இன்றளவும் திரையரங்கை நிரப்பி வருகிறது. 

தளபதி விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துடன் வந்ததால், கார்த்தியின் 'கைதி' படம் குறைவான திரையரங்குகளிலேயே ரிலீஸ் ஆனது. 

இதனால், பிகில் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் வசூலில் ரூ.200 கோடியை கடந்து சாதனை படைத்தது. ஆனால், நல்ல கதையை நம்பி வந்த கைதிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது வசூலிலும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது. 

இதனால், படம் ரிலீசான  8-வது நாளில்தான் கைதி படம், உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூல் செய்து முத்திரைப் பதித்துள்ளது. 

'பிகில்' படம் ஆக்ரோஷமாக வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில், மெதுவாக வந்தாலும் ஸ்டெடியாக நின்று வசூலை ஈட்டிவரும் 'கைதி', தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் லாபத்தை அளித்த படமாக  அமைந்துள்ளது.