பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாஹித் கபூர். சமீபகாலமாக இவர், ரீமேக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

ஷாஹித் கபூர் நடிப்பில் கடைசியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கபீர் சிங்'. தெலுங்கில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம். 

தெலுங்கை போலவே ஹிந்தியிலும் 'கபீர் சிங்' படம், உலகம் முழுவரும் ரூ.300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிசில் பட்டைய கிளப்பியது. ஷாஹித் கபூர் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் கபீர் சிங்தான். 

இதனால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஷாகித் கபூர், மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த முறை ஷாஹித் கையில் எடுத்திருப்பது ரொமாண்டிக் படம் அல்ல. ஒரு ஸ்போர்ட்ஸ் படம்.. அந்தப்படம்தான் 'ஜெர்சி'. கௌதம் தின்னனூரி இயக்கத்தில், அனிருத் இசையில், 'நேட்சுரல் ஸ்டார்' நானி ஹீரோவாக நடித்த இந்தப் படம், கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப்படம், ரசிகர்களின் வரவேற்பால் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், ஜெர்சி படத்தில் பேசப்பட்ட அப்பா - மகன் இடையிலான காட்சிகள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 
ஏற்கெனவே, இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது, ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. 

நானி நடித்த கேரக்டரில் ஷாகித் கபூர் நடிக்கிறார். இந்த படத்தை அல்லு அரவிந்த், அமன் கில் மற்றும் தில் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதமே ஹிந்தியிலும் இயக்கவுள்ளாராம். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'அர்ஜூன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தைப்போன்று, 'ஜெர்சி' ரீமேக் படமும் ஷாஹித் கபூருக்கு வெற்றி படமாக  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.