தொடர்ந்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் தங்க நாயகனான துப்பாக்கிச்சூடு வீரர் அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட பல வீரர், வீரர்களின் வாழ்க்கை வரலாறும் படமாகி வருகிறது. அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், 1983-ம் ஆண்டு உலக கோப்பையை முதன்முதலில் பெற்றுதந்தவருமான ஆல்ரவுண்டர் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. 

'83' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், உலககோப்பையை வென்று தந்த கபில்தேவாக பாலிவுட் முன்னணி ஹீரோ ரன்வீர் சிங் நடித்து வருகிறார். அதற்கேற்ப கபில்தேவின் மேனரிசங்களை உருவகப்படுத்தி தத்ரூபமாக நடித்துவரும் ரன்வீர் சிங், அசல் கபில் போலவே காட்சித் தந்து படக்குழுவினரை மட்டுமல்ல ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். 

இதற்கு சான்று, '83' படத்திலிருந்து முதல்முறையாக வெளியான ரன்வீர் சிங்கின் லுக்தான். 
இதனால் '83' படம் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும் வேளையில், கபில்தேவின் ஃபேமஸ் ஷாட்டான 'நடராஜ்' ஷாட்டுடன் போஸ் கொடுக்கும் ரன்வீர் சிங்கின் புதிய போட்டோ வெளியாகியுள்ளது. இதனை, ரன்வீர் சிங்கே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அச்சுஅசலாக கபில்தேவை பிரதிபலிக்கும் ரன்வீர் சிங்கின் இந்த ஃபோட்டோ, ரசிகர்களின் லைக்ஸை அள்ளி வருகிறது. கபில்தேவை கண்முன்னால் காட்டிவரும் ரன்வீருக்கு 83 படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என தங்களது வரவேற்பை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தை கபீர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி, சஜித் நதியட்வாலா மற்றும் மது மன்டெனா ஆகியோருடன் ரன்வீரின் காதல் மனைவியும், நடிகையுமன தீபிகா படுகோனேவும் இணைந்து தயாரிக்கிறார். 

இந்திய திரையுலகே ஆவலுடன் எதிர்பார்க்கும் '83' படம், வரும் 2020ம் ஆண்டு கோடை விருந்தாக வெளியாகவுள்ளது.
‘பத்மாவதி ‘, ‘கல்லி பாய்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ மற்றும் ‘ராம் லீலா’ போன்ற வெற்றி படங்களில் தனது நடிப்பால் அசரடித்த ரன்வீர் சிங், '83' படத்திலும் கபில்தேவாக வாழ்ந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொள்வார் என எதிர்பார்க்கலாம்.