நடிகை ஜோதிகாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் இன்று நடைபெறுவதாக இருந்த ‘காற்றின் மொழி’ பட ஆடியோ வெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது.

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்திருக்கும் படம் 'காற்றின் மொழி'. இந்தியில் வித்தியாபாலன் நடித்து வெளிவந்த 'தும்ஹரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரிமேக்காகும்.  இப்படத்தில், நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். 

தீபாவளிக்கு பின்னர் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெறும் என அறிவித்திருந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் எதிர்பார்த்தபடி ’காற்றின் மொழி’ பாடல் வெளியீட்டு விழா நடைபெறவில்லை.  குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்லாமல் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக மட்டும்  மதியம் ஒரு மணியளவில் திடீரென அறிவிக்கப்பட்டது. திடீர் ரத்துக்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது நடிகை ஜோதிகாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமாதலால் அவரின்றி விழா நடத்துவது சரியாக இருக்காது என்று இயக்குநர் ராதாமோகன் கருதுவதாக தெரிகிறது.