ஏற்கனவே கதைத் திருட்டு சமாச்சாரத்தில் கோர்ட்டில் வழக்கு ஒன்றை சந்தித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணியின் ‘காப்பான்’படத்தைக் கேரளாவில் திரையிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படத்தை திரையிட கேரள விநியோகஸ்தர் ஒருவர் தடை கோரியுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ். சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து ‘காப்பான்’தனது கதை என்றும் அதை கே.வி. ஆனந்த் திருடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை கேரளாவில் வினியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் ‘காப்பான்’ படத்துக்கு எதிராக கேரள வினியோகஸ்தர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் தனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.இதுகுறித்து விசாரித்த கேரள வினியோகஸ்தர் சங்கம் டோமிசனுக்கு வினியோக உரிமையை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகவும் அதை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காப்பான் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் தமிழ் படங்களுக்கு எப்போதுமே  நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால் என்று அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களையும் அங்கு திரையிட்டு நல்ல வசூல் பார்க்கின்றனர். விஜய்,அஜீத், சூர்யா போன்றோர்களின்  படங்களை சுமார் 225 தியேட்டர்கள் வரை திரையிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.