kaala movie release cout jurdgement


ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தடை போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கொண்டு சென்றுள்ளார் நடிகரும் 'காலா' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ். கர்நாடகாவில் 'காலா' படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், பெங்களூர் காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனுஷ் கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, 'காலா' படம் வெளியாகும் போது, எந்த அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் படம் வெளியாகும் தியேட்டர் விபரங்களை தயாரிப்பாளர் முன்கூட்டியே அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.