ஜோதிகா கதை நாயகியாக நடித்து, புதுமுக  டைரக்டர் கவுதம் ராஜ் டைரக்டு செய்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் அறிமுக விழா, சென்னையில் நடந்தது. அதில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

அப்போது பேசிய ஜோதிகா  இந்தப் படம்  அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பற்றிய கதை. இதேபோன்ற கதைகளுடன் ஏற்கனவே ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ ஆகிய படங்கள் வந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள். 

இதுபோன்ற நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட நூறு படங்கள் வந்தாலும் பரவாயில்லை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் வருவது நல்ல விஷயம்தான் என்றார்..


தொடர்ந்து பேசிய அவர், நிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், ‘நீட்’ தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும் இந்த அரசு என்று அதிரடியாக பேசினார்.

பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆண்கள், சமீபகாலமாக அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். ஒரு அம்மாவாகவும், நடிகையாகவும் நான் என் கடமைகளை சரியாக செய்து வருகிறேன். இந்த படத்தில், பூர்ணிமா பாக்யராஜ் சக ஆசிரியையாக நடித்து இருக்கிறார். அவருக்கு என் நன்றி என ஜோதிகா தெரிவித்தார்.