'நடிப்பில் இன்னும் நான் ஒரு குட்டி மாணவன்தான். ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா ஒரு அன்பான டீச்சராக மாறி பல காட்சிகளில் எப்படி நடிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்’என்கிறார் அப்பட நாயகன் விதார்த்.

தும்ஹாரி சூலு’ என்கிற பாலிவுட் படத்தை ‘காற்றின்மொழி’ என்ற பெயரில் இயக்குநர் ராதாமோகன் இயக்கியுள்ளார். ஜோதிகாவுக்கு உடல் நலம் குன்றி இருந்ததால் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டான இதில் ஜோதிகாவின் இணையாக விதார்த் நடித்துள்ளார்.

விழாவில் பேசிய விதார்த், “தனஞ்செயன் என்னிடம் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா என்று கேட்டார். ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்குக் கனவோடு இருந்தேன். அதேபோல என் அம்மாவுக்கும், மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே ஏன் நான் ஒப்புக்கொண்டேன் என்று பயந்தேன். 

ஆனால் நான் பயந்த அளவுக்கு இல்லாமல் படத்தில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. இயக்குநர் ராதாமோகம் குறித்து முன்கூட்டியே எதுவும் தெரியாது என்பதால் கொஞ்சம் பயந்தபடியேதான் படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை.

 

ஆனால் என் பயத்தைப் புரிந்துகொண்ட அவர் தனது மாணவனைப்போல் நடத்தி முக்கியமான காட்சிகளில் எல்லாம் எப்படி நடிப்பது என்று கேமராவுக்கு முன்னால் செல்வதற்கு முன்பே சொல்லிக்கொடுத்தார். அதே போல் மிகவும் பிரியமாக பழகக்கூடியவர். துவக்கத்தில் அவரை ‘ஜோதிகா மேடம் என்றுதான் அழைத்தேன். ஆனால் அவர் அப்படிப்பட்ட மரியாதை தேவையில்லை. என்னை ஜோ என்றே அழையுங்கள் என்றார். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஜோதிகா டீச்சர்தார்’ என்கிறார் விதார்த் எதார்த்தமாக.