மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜான் ஆபிரகாம் கலந்து கொண்டார், அப்போது அவரிடம் , உங்களின் சொந்த மாநிலமான கேரளத்தில், பிரதமர் மோடிக்கு ஏன் செல்வாக்கு இல்லை?” என்று கேள்விஎழுப்பப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலளித்துப் பேசிய ஜான் ஆப்ரஹாம்கேரளாவில் மோடி ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணம், கேரளத்தின் அழகு என்றார்.

ஒரு 10 அடி இடைவெளியில், ஒரு இந்து கோயில், மசூதி, சர்ச் ஆகிய மூன்றையும் அங்கு பார்க்க முடியும். எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும். அது அங்கு ஒரு பிரச்சனையே இல்லை. 

உலகமே இன்று முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கேரளம்தான். எல்லா மதங்களும், இனங்களும் ஒரே இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் கேரளம். 

அதுமட்டுமல்ல, கேரளா ஒரு கம்யூனிச மாநிலம். பிடல் காஸ்ட்ரோ மறைந்த போது கேரளத்தில் அவருடைய பதாகைகளை ஏந்தி பலர் இரங்கல் செலுத்தியது எனது நினைவில் இருக்கிறது. என்னுடைய சிறு வயதில் காரல் மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை கொடுத்து எனது தந்தை படிக்கச் சொன்னார். கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான். அந்த வகையில், சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை என அதிரடியாக தெரிவித்தார்.

அந்த நம்பிக்கையில் ஜொலிக்கும் கோவில்தான் கேரளா என தெரிவித்த நடிகர் ஜான் ஆப்ரஹாம், இது வரை அரசியல் குறித்து எந்த கருத்தையும் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.