தமிழ்த்திரையுலகில் ஒரு நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வரும் நடிகர் ஜீவாவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்திப்படத்தில் நடிக்கும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு அடித்துள்ளது. அப்படத்தில் கிரிக்கெட் வீர ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார் ஜீவா.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகவே சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படங்கள் தரமுடியாமல் தவிக்கும் நடிகர் ஜீவா கடைசியாக நம்பி இருப்பது ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகி ‘ஜிப்ஸி’படத்தை. இப்படத்துக்குப் பின்னர் ஜீவா கொஞ்சம் தேறிவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சர்பரைஸாக கபீர்கான் இயக்கும் ‘1983’ என்ற இந்திப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் வென்றது. வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் ‘1983’ படம் உருவாக இருக்கிறது.

இதில், உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த மாவீரன்  கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க துவக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜூன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இயக்குநர் கபீர்கான் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால்தான் அது பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பை கன்வின்ஸ் செய்ய, இயல்பிலேயே கிரிக்கெட் ஆர்வம் அதிகம் கொண்ட ஜீவாவுக்கு அந்த வாய்ப்பு வந்தது.

மார்ச்சில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கும் ஜீவா, ஒரிஜினல் நாயகன் ஸ்ரீகாந்துடன் தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி எடுக்கத்துவங்கியிருக்கிறார்.