இன்ப அதிர்ச்சியா துன்ப அதிர்ச்சியா என்று குழம்பிப்போகும் அளவுக்கு தனது அடுத்த படத்தில் ஒன்பது கேரக்டர்களில் நடிக்கவிருப்பதை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இது முழுக்க முழுக்க காமெடிப் படம் என்ற பெயரில் இந்த டிராஜடி அரங்கேறவிருக்கிறது.

‘அடங்க மறு’ படத்துக்கு அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்துக்கு ’ஜெ.ஆர் 24’ என்று தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்துக்கு ‘கோமாளி’ என்ற பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவித்த ஜெயம் ரவி அப்படத்தில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி போட, படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.’எல்.கே.ஜி’ படத்தைத் தயாரித்த  ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் பிரதீப்,’தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது’ என்கிறார்.