‘கோமாளி’ ட்ரெய்லருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  நடிகர் கமலும்  அதன் தயாரிப்பாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியை பதிவு செய்தார். இதனால் இது கூடுதல் சர்ச்சையாக உருவெடுத்தது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், இந்தச் சர்ச்சை தொடர்பாக ஜெயம் ரவி ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...என்னுடைய தொழில் வாழ்க்கையின் ஆரம்பம் முதலே நான் மிகவும் தன்னுணர்வுடன் என்னைப்பற்றி வெளிப்படையான, சுத்தமான ஒரு நபராக பராமரித்து வருகிறேன், அதாவது நான் எந்த ஒரு சர்ச்சைகளிலும் ஈடுபட்டதில்லை. என்னுடைய நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் கற்பனை கதாபாத்திரங்கள் மூலமே திரைப்படங்களில் வெளிப்பட்டுள்ளது. இதிலும் நான் எல்லை மீறியதில்லை. நான் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான நட்புறவு கொண்டுள்ளவன். திரைத்துறையில் அனைவருடனும் பரஸ்பர நண்பர் என்ற வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.

என்னுடைய ‘கோமாளி’ திரைப்படத்தின் ட்ரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது கேளிக்கை மிகுந்த குடும்ப பொழுதுபோக்குச் சித்திரம் என்ற பெயரை ரிலீசுக்கு முன்னதாகவே எடுத்துள்ளது. இருப்பினும், ட்ரெய்லரில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பற்றிய ஒரு குறிப்பிட்ட விஷயம் துரதிர்ஷ்டவசமாக சில பல தலைவர் ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. நான் இது பற்றி தெளிவு படுத்த விரும்புகிறேன், அதனை ஒரு பாசிட்டிவ் அம்சமாகவே சேர்த்துள்ளோம்.

ரஜினியின் ஒவ்வொரு தீவிர ரசிகர் போல் நானும் அவரது அரசியல் பயணம் குறித்து ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். அவரது நடிப்பு, பாணி ஆகியவை கட்டாயமாக எங்கள் நடிப்புடன் உட்கலந்து விட்ட ஒன்று. ஆகவே அவருக்கோ அவரது ரசிகர்களுக்கோ நாங்கள் மரியாதை குறைவு ஏற்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை.ரஜினி சாரே எங்கள் கோமாளி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து விட்டு அதன் படைப்பம்சத்தையும் தனித்துவமான கருத்தையும் வெகுவாகப் பாராட்டினார். இருப்பினும் அத்தகைய ஒரு காட்சி வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களின் உணர்வுகளைப்புண்படுத்துவதினாலும், அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்துள்ளதாலும் நாங்கள் அந்தக் காட்சியை நீக்க முடிவெடுத்தோம். ஆகஸ்ட் 15ம் தேதி படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்’என்று தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி. ட்ரெயிலரைப் பார்த்துவிட்டுப் பாராட்டியபோது அக்காட்சியை நீக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் விளங்கவில்லை.