ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 24ம் தேதி அன்று ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாகவும், அதற்கு ஆதரவளிக்கும் படியும் கேட்டுக்கொண்டார். தற்போது பூமி திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இன்று நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பூமி பட புரோமோஷனுக்காக ஜெயம் ரவி பங்கேற்க உள்ளார். இதற்கான புரோமோ வீடியோ ஒன்றையும் விஜய் டி.வி. வெளியிட்டுள்ளது. அதில், ஜெயம் ரவி மற்ற போட்டியாளர்களிடம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துட்டோம். இப்ப விளையாடுற மாதிரியே நேர்மையாக விளையாடுங்க என சொல்கிறார். உடனே கமல் நீங்க ரெகுலரா பிக்பாஸ் பார்க்குறீங்களா? என கேட்க. சார் நீங்க எது பண்ணாலும் நான் பார்ப்பேன்... நான் உங்க வெறித்தனமான பக்தன்... என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஹவுஸ்மேட்ஸை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ...