புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்கிற பழமொழிக்கு ஏற்ப, அப்பா மட்டும் நடிப்பில் கில்லி இல்லை, நானும் தான்... என தன்னுடைய முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். 

சமீப காலமாக, யூகத்திற்கு அப்பாற்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. அந்த வகையில் இவர் நடித்த 'மிருதன்', மற்றும்'டிக் டிக் டிக்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில், நடிகர் ஜெயம் ரவி மேஜிக் மேனாக நடித்திருந்தார். "இந்தியா மீது விழ வரும் ராட்சத எரிகல்லை, தகர்க்க, சீனா விண்வெளி வீரர்கள் "விண்வெளியில்" பாதுகாத்து வரும் அணுசக்தி மிகுந்த ராக்கெட்டை தன்னுடைய மேஜிக் மூலம் எப்படி திருடி இந்தியாவை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை". இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன், ஆரவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.  

மேலும் இந்த படத்தில், ஆரவ் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுக மாகியிருந்தார். இவரின் குழந்தை தனமான நடிப்பு மற்றும் 'துருவா' பாடல் ரசிகர்களை ரசிக்கவைத்தது.

 

இந்நிலையில் , இந்த படத்திற்காக ஜெயம் ரவியின் மகனுக்கு 'சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரம்' என்கிற பட்டியலில் உயரிய விருதுகளில் ஒன்றான எடிசன் அவார்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்த புகைப்படத்தினை மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலர் ஜெயம் ரவியின் மகன் ஆரவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விருது ஆரவிற்கு கிடைத்துள்ளதால் ஜெயம் ரவியின் பேமிலி செம ஹாப்பியாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.