முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை படமாக்க பல்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த படத்தை படமாக்கும் லிஸ்டில் நான்கு பேர் பெயர் தற்போது வரை பட்டியலில் உள்ளது.

அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய, பிரியதர்ஷினி 'அயன் லேடி' என்கிற பெயரில் இந்த படத்தை படமாக்கி வருகிறார். 

இதே போல் இயக்குனர் பாரதி ராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை படமாக்க முனைப்பு காட்டினார். ஆனால் தற்போது வரை இது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தும், லிங்கு சாமியை வைத்து இந்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. அதே போல் இயக்குனர் ஏ.எல்.விஜயும் விரைவில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்தார். 

இந்நிலையில்,  இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்த படம் குறித்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, அதிகார பூர்வமாக சமூக வலைத்தளத்தில், படத்தின் பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, விஷின் துரை என்பவர் விப்ரி மீடியா சார்பாக தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனி எடிட்டராகவும், சில்வா சண்டை காட்சிகள் அமைக்க உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள, நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.