அவர்களில் இயக்குநர் கவுதம் மேனன் 'குயீன்' என்ற தலைப்பில் வெப் சீரிசாகவும், இயக்குநர் விஜய் 'தலைவி' என்ற தலைப்புடன் திரைப்படமாகவும் ஜெயலலிதா பயோபிக்கை எடுப்பது நமக்கு தெரிந்ததே.

இதில், 'கிடாரி' இயக்குநர் பிரசாத் முருகேசனுடன் இணைந்து கவுதம் மேனன் இயக்கியுள்ள 'குயீன்' வெப் சீரிஸில், ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணனன் நடித்துள்ளார். சிறுவயது ஜெயலலிதாவாக 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவும், இளைமைகால ஜெ-வாக 'துருவங்கள் 16' படத்தின் ஹீரோயின் அஞ்சனாவும் நடித்துள்ளனர்.

 தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காள மொழிகளில் உருவாகியுள்ள 'குயீன்' வெப் சீரிசுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
முதலில் 'குயீன்' சீரிஸின் டீஸர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து,வெள்ளை நிற புடவையில் அசல் ஜெயலலிதா போன்றே ரம்யா கிருஷ்ணன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை  ஆச்சரியப்படுத்திய படக்குழு, தற்போது ஜெயலலிதாவின் மறைந்த நாளில் (டிச.5) 'குயீன்' டிரைலரை வெளியிட்டு அதிரவைத்துள்ளது.


ஜெயலலிதாவின் பள்ளிக்காலம், இளமைக்காலம், திரையுலக பிரவேசம், சகநடிகருடனான காதல் மற்றும் அரசியல் பிரவேசம் தொடங்கி எம்ஜிஆர் மறைவு வரையிலான பல காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அச்சு அசலாக ஜெயலலிதாவைப் போன்றே நடை, உடை, பாவனையில் கம்பீரம் காட்டியிருக்கும் ரம்யாகிருஷ்ணனை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். 

குறிப்பாக, டிரைலரின் கடைசியில் இடம்பெற்றுள்ள "குழந்தை பெத்துதான் அம்மாவாகனும்ங்றது இல்லை" என்ற வசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
எனினும், ஏற்கெனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், யாரும் அறிந்திராத ஜெ.வின் பல அந்தரங்க வாழ்க்கை பற்றியும் கூறியுள்ளதால் 'குயீன்' வெப் சீரிஸ் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால் அச்சமடைந்துள்ள இயக்குநர் தரப்பு, 'குயீன்' ஜெயலலிதாவின் பயோபிக் இல்லை என்றும், ஒரு பெண் எப்படி சினிமாவில் ஜெயித்து பிறகு தமிழக அரசியலில் ஆளுமை செலுத்துகிறார் என்பதை கற்பனையாக எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

 
அதுமட்டுமல்லாமல், எதிர்ப்புகளை சமாளிப்பதற்கு ஏற்றவகையில், 'குயீன்' வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் பெயரை சக்தி சேஷாத்ரி என்றும் எம்.ஜி.ஆர் பெயரை ஜி.எம்.ஆர் எனவும் படக்குழு மாற்றியுள்ளது. 

இப்படி, கட்சி கொடிகள், பெயர்கள் அனைத்தையும் மாற்றியிருந்தாலும், ஜெயலலிதாவை பிரபதிபலிக்கும் 'குயீன்' வெப் சீரிஸ், அரசியல் களத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது