January 12 ...A.R.Rahuman music mela in chennai
ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இளையராஜாவின் இசைக்குழுவில் கீ போர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குநர் மணிரத்னம் 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 1992 ஆம் ஆண்டில் 'ரோஜா' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன..

இந்நிலையில், இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் - பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 12ஆம் தேதி மாலை நேற்று - இன்று - நாளை என்ற இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தியில் ரகுமான் இசையில் உருவான பாடல்களை பாடகர்கள் பலர் பாட உள்ளனர்.
சொந்த மண்ணில் இசையமைப்பாளர் ரகுமானின் பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து காத்திருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சி அவரது பயணத்தில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
