Asianet News TamilAsianet News Tamil

இதுக்கு போய் ஆஸ்காரா... 80 கோடி செலவு பண்ணிதான் வாங்கிருக்காங்க! விமர்சனங்களுக்கு விளக்கம் தந்த ஜேம்ஸ் வசந்தன்

ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் பட பாடல் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

James Vasanthan reply for the Naatu Naatu song Oscar controversy
Author
First Published Mar 14, 2023, 10:02 AM IST

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் அளித்து தனது முகநூலில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் வென்றவுடன் பாராட்டுகள் ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், மறுபுறத்தில், ஆஸ்கர் விருது என்பதே பம்மாத்து; கோடிக்கணக்கில் லாபி செய்துதான் இதில் விருதுகளைப் பெறமுடியும்; இவர்களும் 80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இதை வாங்கியிருக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் கூடவே வருவதையும் காணமுடிகிறது.

ஆஸ்கர் விருதின் மீது வைக்கப்படுகிற இந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு அடிப்படை உண்மைகள் இருந்தாலும், எல்லா சமயங்களிலும் எல்லா வெற்றிகளும் இப்படிப் பெறப்பட்டவைதான் என்று சொல்லமுடியுமா? அதற்கு சாத்தியம் உண்டா? அப்படிப் பார்த்தால் எந்த விருதில், எந்த அங்கீகாரத்தில் அரசியல், லாபி, பணவிளையாட்டு இல்லை? 

விருதுகளுக்கு ஏன் போகவேண்டும்? மற்ற இடங்களில் இது இல்லையா? வேலைவாய்ப்பு, பதவி, பணி பேரம், நீதிமன்றத் தீர்ப்புகள் என்று எல்லாவற்றுக்கும் இன்று ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு விட்டதே! எங்கோ ஒரு சிறு விஷயத்தில் நாம் பாரபட்சமாகவோ, சுயநலத்துடனோ, வேண்டியவர் வேண்டாதவர், என் இனம், என் மக்கள் என்றோ பல்வேறு சூழல்களில் நாம் தவறியதே இல்லையா? எல்லாமே அறப் பிறழ்வுதானே?

அதனால் இந்த வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிய உயரிய விருதை நம் நாட்டுப் பாடல் பெற்றிருக்கிற தருணத்தில் அவர்களை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பழிசொல்லாதிருப்பது பண்பாயிருக்கும்" என பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... இளையராஜாக்கு போட்டியா இறக்கிவிடப்பட்ட 2 குதிரைகளும் ஆஸ்கர் அடிச்சிருச்சு! ARR, கீரவாணிக்கு இப்படிஒரு ஒற்றுமையா

James Vasanthan reply for the Naatu Naatu song Oscar controversy

மற்றொரு பதிவில், 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டதிலிருந்தே லேசாக கிளம்பிய விமர்சனப் புயல் இப்போது முழு வீச்சில் வீசிக்கொண்டிருக்கிறது. ரஹ்மான் 2009-ல் வென்றபோதும் இதே போன்ற (சிறுபிள்ளைத்தனமான) விமர்சனங்கள் வந்தன; இப்போதும் சுற்றுகின்றன.

இதுதான் அந்த விமர்சனத்தின் மையக்கரு: “பல இசையமைப்பாளர்கள் இசையில் இதே போன்ற நூற்றுக்கணக்கானப் பாடல்கள் நம் நாட்டில் எல்லா மொழிகளிலும் காலங்காலமாக வந்திருக்கின்றன.  இது என்ன சிறப்பென்று இதற்குப் போய் ஆஸ்கர்?”

ரஹ்மான் வென்றபோது, “இவரோட எத்தனையோ அருமையான பாடல்கள் இருக்க இந்தப் பாட்டுக்குப் போயா குடுப்பாங்க?”

இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”

ஆஸ்கார் விருது என்பது சேவை விருதுகளைப் போல தேடித்தேடி அலைந்து கண்டுபிடித்து கொடுக்கப்படுவது அல்ல. அங்கு சமர்ப்பிக்கப்படுகிற படங்களைப் பார்த்து, பாடல்களைக் கேட்டு நடுவர் குழு அளிக்கிற தீர்ப்புதான் அது. நம் நாட்டு தேசிய திரைப்பட விருதுகள் போலவே. Slumdog Millionaire, RRR போன்றவை சமர்ப்பிக்கப்பட்டன. அதில் தேர்வாகி அடுத்த நிலைக்கு நியமனம் செய்யப்பட்டு இறுதியில் வென்றன. 

இது ஒருபுறம். அந்தப் பாடல்களை விட பல நல்ல பாடல்கள் உள்ளன என்கிற திறனாய்வு மதிப்பீட்டு விமர்சனம் செய்வதை விட எப்படி இந்த நம்மூர்ப் பாடல்கள் உலகின் மறு அரைகோளத்தில் உள்ளவர் கவனத்தை ஈர்த்தன/ஈர்க்கின்றன என்கிற கோணத்தில் ஆய்வு செய்தால் அது நமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயனளிக்கும். 

James Vasanthan reply for the Naatu Naatu song Oscar controversy

இசை நுணுக்கம் அறிந்தவர் கொஞ்சம் ஆழமாக, தொழில்நுட்ப ரீதியில் ஆராய்வர். நாம் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம். இந்தப் பாடல்களை நன்கு கேட்டுப் பார்த்தால் நம்மூர் சரக்கும் இருக்கும், மேலை நாட்டு சரக்கும் இருக்கும். அந்த உலகளாவிய பொதுத்தன்மைதான் இவற்றின் அடிப்படை பலம் (universal factor). இது இல்லையென்றால் இங்கு எவ்வளவு ஹிட்டானாலும் அங்கு ஒரு வேலையும் செய்யாது.

பாடலின் ராகம் அவர்கள் மனதை ஆட்கொள்ளக்கூடிய எளிய பாணியில், திரும்பப் பாடக்கூடிய விதத்தில் இருப்பதும், அதன் பின்னணி இசையில் அவர்கள் அந்நியப்பட்டு விடாமல் அவர்கள் பாட்டையே கேட்பது போலவும், ஆனால் அதில் ஒரு புதுமை உள்ளதையும் உணரும்படி இருப்பதால் அவர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.

இந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரு படி மேலே போய் அந்த நடன அமைப்பு அட்டகாசமாக இருந்ததால் ஒரு Music Video தாக்கத்தை ஏற்படுத்தி அந்த வேலையை எளிதாக்கி விட்டது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த நடனந்தான் இந்தப் பாடலை இந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டு சென்றது” என குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கர் பற்றிய அவரின் இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளன.

இதையும் படியுங்கள்... எனக்குன்னே வருவீங்களாடா..! விக்னேஷ் சிவனை விடாது கருப்பாய் துரத்தும் பிரச்சனைகள்... இப்போ என்ன ஆச்சு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios