விலங்குகள் நலவாரிய அமைப்பான பீட்டா, எனக்கு சைவ உணவு பிரியர்களுக்கான விருது வழங்கியதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டி, பீட்டா, இந்திய விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டுபோட்டி நடத்தமுடியாமல் உள்ளது.

இதையடுத்து, ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்க கோரி வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு சினிமா துறையினர் உள்ளிட்ட பலபிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரீகத்தில் மனிதனும், காளையும் இணைந்தே உழைத்ததே அறிய முடிகிறது. ஜல்லிக்கட்டு தடை என்பது, ஒரு இனத்தின் அடையாளத்தை, பன்பாட்டை அழிக்கும் செயல்.

 இந்திய சுதந்திரப்போராட்டத்தை படித்து இருக்கிறேன், ஆனால், இப்போதுதான் தமிழ் இளைஞர்களின் வீரமிக்க எழுச்சிப் போராட்டத்தை பார்த்து இருக்கிறேன். அறவழியில் போராடும் தமிழக இளைஞர்களின் செயலைப் பார்த்து தலை வணங்குகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2012ம் ஆண்டு பீட்டா அமைப்பு எனக்கு சைவம் சாப்பிடுவதற்காக, ஹாட்டஸ்ட் வெஜிட்டேரியன் விருது வழங்கியது. ஆனால்,அந்த விருதை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன், வருத்தப்படுகிறேன்.

நானோ, எனது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களோ பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை. நாங்கள் பீட்டாவில் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று யாராவது கூறினால் அது வீண் வதந்தி. காட்சிப்பட்டியலில் இருந்து காளையின் பெயரை நீக்கி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.