சிங்கம்-3 திரைப்படத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் என்று பீட்டா அமைப்பு கூறியதற்கு அந்த அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என் நடிகர்சூர்யா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக நடிகர் சூர்யா சமீபத்தில் தனது ஆதரவைத் தெரிவித்தார். இது குறித்து விமர்சனம் செய்த பீட்டாஅமைப்பு, விரைவில் வெளிவரவுள்ள சிங்கம்-3 திரைப்படத்துக்காக விளம்பரம் தேடவே சூர்யா இப்போது குரல் கொடுக்கிறார். மற்றவகையில் அவர் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்க எந்த விதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் பீட்டா அமைப்பின் இந்த விமர்சனம் நடிகர் சூர்யாவுக்கு பெரிய மன உளைச்சலை அளித்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ஆர்.விஜய் ஆனந்த் அந்த அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த அமைப்பின் தலைமைநிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபூரா மற்றும் இரு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் சூர்யாவின் வழக்கறிஞர் ஆர் விஜய் ஆனந்த் கூறுகையில், “ ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த காலங்களில் பல நேரங்களில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இதுபோன்ற நேரத்தில் மட்டும் குரல் கொடுத்து, தனக்கு கீழ்த்தரமான விளம்பரம் தேடிக்கொள்ள அவருக்கு அவசியம் கிடையாது.

பீட்டா அமைப்பின் இதுபோன்ற கீழ்த்தரமான, தீய உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள் நடிகர் சூர்யாவின் மதிப்பை குலைக்கிறது. கெட்ட பெயரை உண்டாக்கும் நோக்கில், தீய நோக்கில் தெரிந்தே தவறான தகவல்களை கூறுகிறது. இந்த கருத்தால் நடிகர் சூர்யாவும், அவரின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மனரீதியாக பெரும் உளைச்சலையும், வேதனையும் அடைந்துள்ளார்.

ஆதலால், பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா மற்றும் இரு அதிகாரிகள் நிபந்தனை அற்ற மன்னிப்பை அடுத்த 7 நாட்களுக்குள் நடிகர் சூர்யாவிடம் கேட்க வேண்டும். இதை ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செயல்படத் தவறினால்,பீட்டா அமைப்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.