தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜய்யின் அப்பாவான இவர், சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன், நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 'டூரிங் டாக்கீஸ்' படத்தை இயக்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக ரீ-எண்ட்ரீ  கொடுக்கும் படம்தான் 'கேப்மாரி'. அவரது இயக்கத்தில் உருவாகும் 70-வது படம் இதுவாகும். 

இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 
ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள கேப்மாரி படம், சென்சார் செய்யப்பட்டு ஏ சர்டிஃபிகேட்டுடன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் கடைசி படம் என்ற அறிவிப்புடன் உருவாகியுள்ள 'கேப்மாரி' படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. டிரைலரை பார்ப்பவர்கள் இது எஸ்.ஏ.சி. படமா? என அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அளவுக்கு, டபுள் மீனிங் வசனங்கள், லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் நிறைந்திருந்தன. இந்நிலையில் படத்தின் ஸ்னேக் பீக் காட்சி ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

ஹீரோயின் அதுல்யா, ஜெய்க்கு மேஜிக் மூலம் பீர் வரவழைத்து கொடுப்பது போன்ற காட்சிகளும், முத்த காட்சியும் இடம் பெற்றுள்ள சில நிமிட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படம் இம்மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.