’மவுன குரு’ சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து க்ரைம் த்ரில்லர் படமான ‘மகா முனி’ படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்தது. இத்தகவலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அருள்நிதியை நாயகனாகக் கொண்டு சாந்தகுமார் இயக்கிய ’மவுன குரு’ படம் அபார வரவேற்பைப் பெற்றது. அடுத்து சூர்யா, கார்த்திகளுக்காக காத்திருந்த சாந்தகுமார் 7 ஆண்டுகளாக இரண்டாவது படத்தை இயக்காமல் காத்திருந்தார். அடுத்து சுமார் 5 மாதங்களுக்கு ஆர்யாவை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக அவர் இயக்கும் ‘மகா முனி’ படத்தின் அறிவிப்பு வந்தது.

ஒரு அரசியல்வாதியின் மகனாக ஆர்யா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்க அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தவிர தனது அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாம் ஜார்ஜையும் முக்கிய வேடத்தில் நடிக்கவைத்திருக்கிறார் சாந்த குமார்.கேரளாவில் சில இடங்களிலும் காஞ்சிபுரம், ஈரோடு பகுதிகளில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் ஆர்யா பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில்...’மகா முனி’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அழகு...அழகு...ஒரு மிகச் சிறந்த கதை சொல்லி இயக்குநரின் கதையில் நடித்ததில் மகிழ்ச்சி...’நீங்க ஏழு வருஷமா மனசுக்குள்ள அடைகாத்து வச்சிருந்த கதைக்கு நான் நியாயம் செஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன் சார்’ என்று பதிவிட்டிருக்கிறார்.