பிகில் பட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருமான வரிச்சோதனை நேற்று இரவோடு நிறைவடைந்தது. விஜய் வீட்டில் இருந்து சல்லிக்காசு கூட கிடைக்காததால், இரண்டு நாட்களாக சல்லடை போட்டு தேடிய வருமான வரித்துறையினர் வந்த வழியே திரும்பிச்சென்றுள்ளனர். இது எல்லாம் மாஸ்டர் படத்துக்கு கிடைச்ச புரோமோஷன் என்பது போல், விஜய் சத்தமே இல்லாமல் நெய்வேலி ஷூட்டிங்கிற்கு திரும்பிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். 

ஆனால் பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பிரபல பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுவரை 77 கோடி ரூபாய் பணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய ஆவணங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் என ஐ.டி.  ரெய்டில் வசமாக சிக்கிக்கொண்டார் அன்புச்செழியன். கைப்பற்றப்பட்ட டாகுமெண்டுகளின் மதிப்பின் படி, அன்புச்செழியன் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதேபோன்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஃபைல் ஒன்று சிக்கியதாகவும், அதன் மூலம் தான் தளபதி விஜய்க்கு வலைவீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆவணம் மூலம் பிகில் பட வசூல் மற்றும் வரவு, செலவு கணக்குகளில் குளறுபடி நடந்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது. 

ஆளமாக தோண்டினால் இன்னும் ஏதாவது சிக்கலாம் என்ற நோக்கில் சென்னை தியாகராய நகர், ராகவய்யா தெருவில் உள்ள பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்திலும், சாரங்கபாணி தெருவில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டர் அலுவலகத்திலும் 3வது நாளாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.