It is unfortunate that protesting without seeing Padmavathi
பத்மாவதி படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பு தெரிவிப்பது துரதிருஷ்டமானது எனது தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்து இருப்பதைப் பார்த்து நான் பயப்படப்போவது இல்லை என நடிகை தீபிகா படுகோனே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்..
பத்மாவதி
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–-ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.

ரூ.10 கோடி பரிசு
திருமணமான பத்மினி அலாவுதின் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இருக்கிறது என்றும் படத்தில் அதை திரித்து அலாவுதீன் கில்ஜியை பத்மினி காதலிப்பதுபோல் காட்சி வைத்துள்ளனர் என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.
கேலிக்கூத்து
இந்த பிரச்சினை குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டி வருமாறு:–-
‘‘பத்மாவதி படத்தை தேவை இல்லாமல் எதிர்க்கிறார்கள். இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் எதுவும் இல்லை. படத்தை பார்த்து விட்டு அதில் தவறு இருந்தால் விமர்சிப்பதிலும் எதிர்ப்பு தெரிவிப்பதிலும் நியாயம் இருக்கிறது.

ஆனால் படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பதும் போராட்டங்கள் நடத்துவதும் எனது தலைக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
பயப்படமாட்டேன்
எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைக்கு பரிசு தொகை அறிவித்து இருப்பதால் பாதுகாப்பு அளித்துள்ளனர். நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
