‘சிவகார்த்திகேயனிடம் 15 வருடங்களுக்கு பார்த்த அதே ரஜினியை அப்படியே பார்க்கிறேன். ரஜினியிடம் இருக்கும் அதே நடை, உடை, பாவனை,கண்களில் துறுதுறுப்பு எல்லாம் சிவகார்த்திகேயனிடம் அப்படியே இருக்கிறது’ என்று சி.கா.வை புகழ்ந்து தள்ளுகிறார் நடிகை இஷா கோபிகர்.

‘காதல் கவிதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அரவிந்த சாமியுடன் நடித்த ‘என் சுவாசக் காற்றே’ படத்தின் மூலம் பிரபலமானவர் இஷா கோபிகர். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய அவர்  தமிழில் கடைசியாக கேப்டன் விஜயகாந்துடன் ‘நரசிம்மா’ படத்தோடு தமிழ்த்திரையுலகை விட்டு மூட்டையைக் கட்டினார். பின்னர் தொடந்து இந்திப்படங்களில் நடித்து வந்தவர் திருமணமானவுடன் நட்புக்காக மட்டும் அவ்வப்போது இந்திப்படங்களில் தலைகாட்டினார்.

இந்நிலையில் சுமார் 17 வருட இடைவெளிக்குப் பின் சிவகார்த்திகேயனை ஹீரோவாகக் கொண்டு  ஆர். ரவிக்குமார் இயக்கும் இன்னும்பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் சில நாட்களே படப்பிடிப்பில் கலந்துகொண்ட இஷா கோபிகர்தான் சிவாவை இப்படி சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

‘இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினி போலவே எனக்கு சிவா காட்சி அளிக்கிறார் என்று நான் சொல்வதில் எந்த மிகையும் இல்லை. ரஜினியின் அம்சங்களாக இருப்பவை என்று நான் கூறும் எல்லாம் தற்செயலாகவே சிவாவிடம் இருக்கின்றனவே ஒழிய, அப்படி ஆக அவர் ஒரு மெனக்கெடலும் செய்வதில்லை’ என்று இன்னும் ஐஸ் வைக்கிறார் இஷா கோபிகர்.