இடையில் சொந்தமாக படம் தயாரிக்கச் சென்று, அதில் நஷ்டமடைந்து முடங்கிக் கிடந்த கவுதம் மேனனுக்கு, 'தல' அஜித் கைகொடுக்க 'என்னை அறிந்தால்' படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். 
அதன் பின், 2016ம் ஆண்டு அவரது இயக்கத்தில், சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 

அடுத்தடுத்த வெற்றியால் உற்சாகமடைந்த கவுதம் மேனன், அடுத்து, தனுஷுடன் கூட்டணி சேர்ந்த படம்தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரித்தார். இந்தப் படத்தின் ஷுட்டிங் போய்கொண்டிருந்த அதேவேளையில், விக்ரமுடன் கைகோர்த்த கவுதம் மேனன், 'துருவ நட்சத்திரம் 'படத்தையும் இயக்கி வந்தார். 

இப்படி ஒரே நேரத்தில் இரு பெரும் நடிகர்களின் படங்களை இயக்கி வந்த கவுதம் மேனன் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவ்விரு படங்களும் பணச்சிக்கலில் சிக்கிக் கொண்டன. இதனால், இதன் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இதில் ஒருவழியாக தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடித்துக்கொடுத்த கவுதம் மேனனால், படத்தை ரிலீஸ் செய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. 

காரணம், பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எனை நோக்கி பாயும் தோட்டாவை சூழ்ந்திருந்தன. இதனால், படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 
இதனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை பார்த்த ஒரு பிரபல தயாரிப்பாளர், கதவுதம் மேனனுக்கு கைகொடுத்துள்ளார். அந்த பிரபல தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. 'எல்.கே.ஜி.,' 'கோமாளி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த ஐசரி கணேஷ்தான். 

அவரது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார். அதன்படி, நவம்பர் 29ம் தேதி 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஐசரி கணேஷ் செய்த உதவிக்கு பிரபதிபலனாக, அவரது நிறுவனம் சார்பில் புதிய படத்தை இயக்கவும் கவுதம் மேனன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 இதற்கான அறிவிப்பையும் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஸ்டைலிஸ்  ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு, 'ஜோஸ்வா இமைபோல் காக்க' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஐசரி கணேசின் நெருங்கிய உறவினர் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். காதலர் தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


ஒரே நாளில் அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கடாச் செய்துள்ள கவுதம் மேனன், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்ய உதவிய ஐசரி கணேசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவரது தயாரிப்பில் தான் இயக்கும் புதிய படமான 'ஜோஸ்வா இமை போல் காக்க'  படம், விஜய் நடிக்கவிருந்த யோஹன் படத்தின் கதை இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். 


பிரச்னைகள் நீங்கி மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவர், துருவ நட்சத்திரம் குறித்த மாஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அடுத்த 60 நாட்களில் முடிந்து, படம் ரிலீசுக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார். அத்துடன், 'சியான்' விக்ரமின் ஸ்டைலிஸ் லுக்குடன் கூடிய புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். எதுஎப்படியோ? கவுதம் மேனன் கஷ்டகாலத்திலிருந்து மீண்டு, அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.