பா.ம.க.வில் அன்புமணிக்கு அடுத்த நிர்வாகி,  சீமானின் படத்தில் குணசித்திர நடிகர்,  தமிழர் பண்பாடு போற்றும் தளங்களில் முக்கிய அரசியல்வாதி... என்றெல்லாம் பன்முக பட்டாசை பற்ற வைத்து வந்தவர் வேல்முருகன்.  அய்யா, சின்னய்யாவுடன் என்ன வாய்க்கா வரப்பு தகராறோ தெரியலை,  திடுதிப்புன்னு அவரை கட்சியை விட்டு நீக்கிப்புட்டாங்க. வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு,  துக்கப்பட்டு,  துயரப்பட்டு  வூட்டுக்குள்ளேயே முடங்கிக் கெடக்க அவரு என்ன வெறும் முருகனா? வேல்முருகனாச்சே! அதான் சீறிக்கிட்டு பாய்ஞ்சு,  செறப்பா ஒரு கட்சியை துவக்கினார்.  அந்த கட்சிதான் ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’.  

ஒரு ஏரியாவுல ஃபார்ம் ஆகணும்னா அந்த ஏரியாவுல தரமா,  சிறப்பா ஏதோ ஒரு சம்பவத்தை பண்ண வேண்டியது அவசியம். அப்பதான் வெளம்பரம் கிடைச்சு,  வெளியில தெரிவோம். அந்த அடிப்படையில நறுக்குன்னு சில ஸீன்களைப் போட துவங்குச்சு த.வா.கட்சி.... அதான் பாஸ் தமிழக வாழ்வுரிமை கட்சி. வட தமிழ் மாவட்டங்களில் டோல்கேட்களில்  சில பல டண்டணக்கா தகராறுகளை செஞ்ச வகையில்  த.வா.க. தானா வளர துவங்குச்சு.  

இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்  பா.ம.க. இணைந்ததால்,  வன்னிய சொந்தங்களின் வாக்குகளையும் வளைப்பதற்காக அதே சமுதாயத்தை மையமாக வைத்து கட்சி நடத்தும் வேல்முருகனை அரவணைத்துக் கொண்டார் ஸ்டாலின்.  ஆனால் ஸீட் கீட் எதுவும் கொடுக்கலை. அந்த தேர்தலில் அந்த கூட்டணி செம்ம அள்ளு அள்ளியது. அந்த வகையில் வேல்முருகனும் ஹேப்பி.  இந்நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. இக்கட்சிக்கு சில ஸீட்களை ஒதுக்கிட, அக்கட்சியும் லேசுபாசா ஏதோ கொஞ்சம் பதவிகளை ஜெயித்திருக்கிறது. நாலஞ்சு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,  மாவட்ட கவுன்சிலர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்ததும் த.வா.க. வேல்முருகனின் மனதில் ஒரு தெம்பு வருமா இல்லையா!  வந்துச்சு.  ஆனால் அதேவேளையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க. நடத்திய பேரணியில் இவருக்கு முன் வரிசையில் இடம் தந்து மரியாதை தராததால் பெரும் கோபம் வேறு இருக்கிறது.

 

தெம்பு ப்ளஸ் பெருமை இரண்டும் ஒன்றுபட கலந்த நிலையில் வேல்முருகன் ஒரு பேட்டியை தட்டியிருக்கிறார்.  அதில் ஸ்டாலினுக்கே சிறப்பாக சில பாடங்களை நடத்தியிருக்காப்ல வேலு. அப்படி என்ன சொல்லியிருக்கார்?..... ”எங்க கூட்டணி சிறப்பாதான் போயிட்டிருக்குது.  எங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்த தி.மு.க.வை பெருவாரியான இடங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஜெயிக்க வைத்திருக்கிறோம்.  அதேசமயத்துல தி.மு.க. எங்களை உதாசீனப்படுத்திய சேலம், தர்மபுரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தோல்வியை சந்திச்சிருக்குது.  அதை கவனியுங்க.  
அதனால தி.மு.க.வை பார்த்து ஒண்ணு சொல்லிக்கிறேன்.  எங்களை உரிய மரியாதையோடு நடத்தினால் அது அவர்களின் வெற்றிக்கு உதவும்.  எங்களை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு அழைச்சாங்க. போனோம்,  இதோ இப்ப வரைக்கும் தொடர்கிறோம்.  ஆனால் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருப்பவர்களை  கூட்டணி கட்சிக்காரர்களாகவும்,  எங்களை தோழமைக் கட்சிக்காரர்களாகவும் மட்டுமே அங்கீகரிக்கிறாங்க.

 

இதில் எனக்கு கவலை இல்லை. போன சட்டமன்ற தேர்தலில் எங்களைக் கூட்டணியில் சேர்த்திருந்தால், தி.மு.க. நிச்சயம் ஆட்சியை பிடிச்சிருக்கும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது தி.மு.க.வின் ஆசை, எண்ணம், கனவு. அதற்கு நாங்கள் முழுமையாய் ஒத்துழைப்பு தந்து, அதை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு எங்களுக்கு அவர்கள் உரிய முக்கியத்துவம் தரவேண்டும். எங்களை அவர்கள் முக்கியத்துவம் தராத இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றிருக்கிறோம். பா.ம.க.வுக்கு சமமாக அல்லது மூன்றில் ஒரு பங்காவது தி.மு.க. எங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டம் தி.மு.க.வுக்குதான்.” என்று, சற்றே மிரட்டல் போல், மதிக்காவிட்டால் கதை கந்தல்!  எனும் ரீதியில் பேசியிருக்கிறார் வேல்முருகன். சர்தான்!

-விஷ்ணுப்ரியா