முதல் சேட்டியூல் நல்லபடியா முடிஞ்சாச்சு... தமிழக மக்களுக்கு நன்றி... இர்ஃபான் பதான் ட்வீட்...!

‘கடாரம் கொண்டான்’படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் தனது 58வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுவரை பெயரிடப்படாத அந்த படம் ‘விக்ரம் 58’ என அழைக்கப்படுகிறது. ‘விக்ரம் 58’ படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டியோவும், வயாகாம் 18 நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

சமீபத்தில் சீயான் விக்ரமிற்கு எந்த படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. எனவே ‘விக்ரம் 58’ படத்தை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்போது ‘விக்ரம் 58’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இர்ஃபான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் முறையாக படத்தில் நடிக்கும் இர்ஃபான் பதான் தமிழக மக்களுக்கு தமிழிலேயே நன்றி சொல்லி அசத்தியுள்ளார். 

அதில், வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி...முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" என்று பதிவிட்டுள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தை விரைவில் திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.