வாரா, வாரம் வெள்ளிக்கிழமை என்றாலே கோலிவுட் திருவிழா போல மாறிவிடுகிறது. உச்ச நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் படங்கள் முதல் புதுமுகங்களின் குறைந்த பட்ஜெட் படங்கள் வரை அனைத்து தரப்பு தயாரிப்பாளர்களும் டார்க்கெட் செய்வது வெள்ளிக்கிழமையைத் தான், காரணம் அடுத்து வரும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எப்படியாவது வசூலை அள்ளிவிடலாம் என்று தான். அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்றும் "ஜடா", "இருட்டு", "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு", "தனுசு ராசி நேயர்களே" ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. 

ஹாரர், காமெடி, விளையாட்டு, அரசியல் என தமிழ் ரசிகர்களுக்கு விதவிதமான விருந்து வைக்கும் விதமாக நேற்று 4 படங்கள் ரிலீஸ் ஆனது. இருப்பினும் ஒரே ஒரு குண்டை பிரதானமாக வைத்து கதை சொன்ன "இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு"  திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது, வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டுள்ளது. நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" திரைப்படம், சென்னையில் மட்டும் ஒரே நாளில் 13 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் இல்லை என்றாலும், மற்ற 3 படங்களுடன் ஒப்பிடும் போது, குண்டு படத்தின் வசூல் சற்றே அதிகரித்துள்ளது. 

அதற்கு அடுத்த இடத்தில் வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி நடத்த "இருட்டு" திரைப்படம் 11 லட்சம் ரூபாயும், ஹரிஷ் கல்யாணின் "தனுச ராசி நேயர்களே" படம் 10 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற "ஜடா" திரைப்படம், சொல்லிக்கொள்ளும் படி வசூல் செய்யவில்லை. முதல் நாளான நேற்று 6 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.